ஸ்ரீசக்தி பெளண்டேஶன், கோவை
ஐயப்ப வழிபாட்டு வரலாறு மற்றும் நெறிமுறைகள் - பகுதி இரண்டு.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் இக்கால மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஐயப்பனின் அவதார வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்வதே இந்த ஆய்வின் லட்சியம்.எனவே அன்பர்கள் எவ்வித குறையிருப்பின் ஏற்றும், திருத்தியும் புதிய கருத்துகளைப் பகிர்ந்தும் கொள்ள வேண்டுகிறோம்!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
_______________________________________________________________________________________________________________________________________
௧.” மத நல்லிணக்கம்” என்ற கோட்பாடு ஐயப்ப வழிபாட்டில் மிகவும் கடைப்பிடிக்கப் படுவதன் நோக்கம் என்ன?
ப்ரபஞ்சத்தில் அனைத்து உயிர்களும் பொருள்களும் சமமே.அனைத்துள்ளும் இறைத் தன்மை நிறைந்துள்ளது.இறைத் தன்மையின் பல்வேறு தன்மைகளுடன் கூடிய பல்வேறு வடிவங்களே அனைத்தும்.இதை உணர்வதே அத்வைத்தக் கொள்கை ஆகும்.இக்கொள்கையைக் கடைப்பிடித்தால் உலகில் வேற்றுமை என்பதே இல்லாமல் சாந்தி நிலவும்.
மனித சமூகம் இனம், மொழி, சாதிகள் மற்றும் மதங்களால் பிளவுபட்டு ஒற்றுமை இல்லாமல் இருக்கும் போதே சமூகத்தில் தீய சக்திகளின் ஆளுமை தலைதூக்கும்.
ஐயப்பனின் திருஅவதாரம் நடந்த காலத்தில் இத்தகைய சமூக வேறுபாடுகள் அதிகம் இருந்தன.அதனால் தான் உதயணன் என்ற கொடுங்கோல் கொள்ளைக்காரன் சமுதாயத்தை ஆட்டிப் படைத்தான்.
இவனை வீழ்த்த மக்கள் அனைவரும் ஒன்றுபடுதல் மிக மிக அவசியம் என்ற உண்மையை ஐயப்பன் வலியுறுத்தினார்.சாதி, மொழி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரையும் நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் ஒன்று சேர்த்தார், படைகளை உருவாக்கினார்.
உதயணனின் சாவுக்குப் பின்னும் தன் கூட்டத்தாரிடையே அத்தகைய ஒற்றுமை நிலவவேண்டும் என்று அவர் வழிவகுத்தார். எருமேலியில் தன் ஆத்ம நண்பர் வாவருக்கு மசூதி கட்ட அனுமதி அளித்ததும், அதில் தன் அன்பர்கள் வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறியதும், தன் மற்றொரு இஸ்லாமிய நண்பர் மிலாதுவுக்குப் பள்ளியில் தன் தோழமையைப் பகிர்ந்து கொண்டதும் அவரது நடைமுறை வாழ்க்கையின் உண்மைகள் ஆகும்.
______________________________________________________________________________________________________________________________________
௨. முக்கண் தேங்காய் எதற்கு இருமுடியில் பயன்படுத்தப் படுகிறது?
மூன்று கண்கள் உள்ள தேங்காய், நமது உடலையும் அதில் உள்ள ஆணவம்-கன்மம்-மாயை என்ற மூன்று கர்வநிலைகளையும் குறிக்கும்.குருவின் அருளால் தூய பக்தி என்னும் நெய்யை அவ்வுடலில் நாம் நிறைத்து இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம். பின்னர் அத்தேங்காயை அக்னிகுண்டத்தில் போடுகிறோம்.ஆணவம் அகன்று இறை ஞானம் கிடைத்தபின் நாம் அக்னிபோல் சுத்தமாகிறோம், மேலும் உடலும் ஒரு நாள் மண்ணுக்குள் போகிறது;பக்தி மட்டும் இறைவனடி சேர்கிறது என்பதையே இருமுடித் தேங்காய் குறிக்கிறது.
ஐயப்பனின் வரலாற்றில் அவர் தன் தாயாரின் உடல் வியாதியை குணமாக்க புலிப்பால் வேண்டி காட்டுக்குள் செல்கிறார் அல்லவா? அவ்வாறு காட்டுக்குக் கிளம்பும் தருணத்தில் அவரது வளர்ப்புத் தந்தையாகிய இராஜசேகர பாண்டியன், தங்கள் குலதெய்வமாம் மதுரை சொக்கநாத ஈசரை மானசீகமாக வேண்டி ஐயப்பனின் பாதுகாப்புக்காக முக்கண் தேங்காயில் முக்கண் சிவனை ஆவாஹனம் செய்து கட்டி அனுப்பிவைத்தார் என்று பழம்பாடல்கள் கூறுகின்றன.
____________________________________________________________________________________________________________________________________
௩. ஐயப்பன் பெண்களை வெறுக்கிறாரா?
”நானும் நீயும் ஒன்றே!” என்ற அத்வைத்த உண்மையை உணர்ந்து அதைத் தன் வாசல் நுழைவாயிலில் ”தத்வ மஸி” என்று நமக்குக் கூறும் ஐயப்பன் எப்படிப் பெண் இனத்தை வெறுப்பார்?
அவர் திருஅவதாரம் செய்த காலத்தே சமூகத்தில் ஆண்கள், பெண்களை நடத்திய விதமே வேறு.பல பெண்களை ஒரு ஆண் மணம் செய்த காலம் அது.பெண்களை உடல் இச்சையைத் தீர்த்துத் தரும் மருந்தாகவும், இலக்கியத்தில் வர்ணிக்க வேண்டிய அழகுப் பொருளாகவும், குழந்தைகளைப் பெறும் கருவியாகவும், போகக் கலைகளின் இடமாகவும் அக்காலச் சமுதாயம் கண்டது.
பல வரலாற்று மாறுதல்களால் பெண்கள் சமூகப் பாதுகாப்பினையும் இழந்தனர்.இத்தகைய நிலையில் தன் இடத்தைத் தேடி வரும் பக்தர்களுக்கு சில விதி முறைகளை வகுத்த நம் ஐயப்பன் பெண்கள் வருவதை மறுத்தார்.காரணங்கள்,
* அடர்ந்த பல காடுகள் மலைகள் கடந்து பெண்கள் தேவையில்லாமல் உடலை வர முடியாது.
* காரணம் பாதுகாப்பும், சுகாதாரமும் பெண்களுக்குத் தருவது கடினம். இன்றுமே ஆண்களுக்கே போதிய கழிவறைகளும் தங்கும் வசதிகளும் மலையில் தரப்படவில்லை.
* மனதைப் பக்குவம் செய்ய வேண்டி வரும் ஒரு புனித யாத்திரையின் போது பெண்கள் அடர்ந்த காடுகளின் வழியே உடன்வருவது கண்டிப்பாகப் புலன் இச்சைகளைப் பலருக்கும் தூண்டலாம்.
* மாதவிடாய்க் காலங்களில் பயணிப்பது என்பது மிகவும் ஆரோக்யத்துக்குக் கேடு உண்டாக்கும்.[ மாதவிடாய்க் காலத்தில் பெண்களின் உடலுக்குப் போதிய ஓய்வு அவசியம்.இதை அன்றைய சமூகம் வலியுறுத்திக் கடைப்பிடித்தது.ஆனால் அந்நியதிகள் காலப்போக்கில் மூடபழக்கங்களாக மாறின.இன்று பெண்களுக்குப் பல உடல் உபாதைகள் வரக்காரணம் மாதவிலக்குக் காலத்தில் ஓய்வே இல்லாமல் போனதால் தான் என்று மேலை நாடுகளும் மருத்துவ ஆய்வுகளைச் செய்து அறிவித்துள்ளன.]
* வீட்டை விட்டுக் கிளம்பும் ஆண் வரும் வரை, அவன் இல்லமும், குடும்பமும், சுற்றமும் இவளின் பொறுப்பாகும்.அவற்றைக் காப்பதே உன்னத இல்லற தர்மமும் கடமையும் ஆகும்.
* குறிப்பாகக் குழந்தைகளையும், வயதான வீட்டுப் பெரியவர்களையும் கவனிப்பதே பெண்களின் தலையாய கடமை ஆகும்.
* இதை எல்லாம் விட ஒரு பெண் தன் கணவனின் வழியில் பக்குவமாகக் குடும்பம் நடத்தும் போது அவளுக்கு வேறு உபாசனைகள் தேவையில்லை என்று ஸ்ரீக்ருஶ்ணனும் கூறுவதையே ஐயப்பனும் கூறுகிறார்.இதற்காகப் பெண்கள் தெய்வநம்பிக்கையைக் கைவிடுமாறு அவர் கூறவில்லை.குடும்பப் பெண்கள் குழந்தைகளுக்கு உண்மையான பக்தியைப் பழக்கப் படுத்தாததால் தான் இன்றைய இளைய சமூகம் பலவழிகளிலும் கஶ்ட்டப்படுகின்றது.பெண் தான் மனிதனுக்கு முதல் ஆன்மீக குரு.
* பெண்பக்தர்கள் பலருக்கு ஐயப்பன் அருளிய பல வரலாறுகளும் உண்டு.
* மலைக்குச் செல்லும் வீட்டில் உள்ள குலப்பெண்களின் தூய்மையும் பக்தியும் தியாகமுமே அவ்வீட்டு ஆண்களை ஐயப்பனிடத்தே இட்டுச் செல்கிறது, பத்திரமாகவும் வீட்டில் கொண்டு வந்து சேர்க்கிறது அல்லவா?
அக்காலத்தில் மலைக்குச் செல்லும் போது வாய்விட்டு அழுவர், கதறுவர்.கணவனும் மகன்களும் திரும்பி வருவது ஐயப்பனின் கையிலேயே உள்ளது என்று பரிபூர்ண சரணாகதியுடன் பெண்கள் இருக்க அவர்களுக்கு ஐயப்பனின் அருள் நிச்சயம் உண்டு!
_____________________________________________________________________________________________________________________________________
௩. ’சபரிமலை’ என்ற பெயர் எப்படி வந்தது?
இராமாயண காலம் பல ஆயிர வருடங்களுக்கு முன்னதாகும்.அப்போது இன்றைய சபரிமலைப் பகுதியில் பல முனிவர்கள் ஆஸ்ரமங்கள் அமைத்து ஆன்மீக நெறியை போதித்து வந்தனர். அவர்களில் ஒருவர் தான் சபரி. அவர் வயதான பெண் யோகி ஆவார்.அவர் ஸ்ரீராமனைக் காண மிக்க ஆசையும் பக்தியும் கொண்டு வாழ்ந்தார்.ஒவ்வொரு நாளும் ஸ்ரீராமனின் வருகைக்காகக் காத்து இருந்தார்.
சீதையைத் தேடி ராமனும் அவ்விடம் வந்த போது சபரியும் ராமனின் அன்பைப் பெற்று மகிழந்தார்.தன் ஆஸ்ரமத்திற்கு சற்று தூரத்தில் இருக்கும் கிஶ்கிந்தைக் காட்டுப் பகுதியைப் பற்றியும் அதில் வாழும் சுக்ரீவன் மற்றும் அனுமானைப் பற்றியும் எடுத்துக் கூறி அவர்களிடம் ராமனை அனுப்பினார்.
சபரி அன்னை பின் பெரிய குழிவெட்டி, தீ வளர்த்து அதில் தன் உடலை அர்ப்பணித்து இறைவனடி சேர்ந்தார்.அதுவே இன்று மலையில் காணப்படும் ”பஸ்ம குளம்” ஆகும். அவரது உடல் பஸ்மமாய் அதாவது சாம்பலாய்ப் படிந்த புனித இடம் அதுவே.
இந்த சபரி அன்னை வாழ்ந்த ஆஸ்ரம இடத்தைப் பரசுராமர் தேர்வு செய்து தர்மசாஸ்தாவை ப்ரதிஶ்ட்டை செய்தார்.அன்று முதல் அவ்விடம் ”சபரி மலை” என்று போற்றப் படுகிறது.
_____________________________________________________________________________________________________________________________________
௪. தர்மசாஸ்தாவின் மறு அவதாரமான ஐயப்பன் ஏன் மீண்டும் அவ்விடத்திலேயே கோயிலை உண்டாக்கினார்?
பரசுராமர் உருவாக்கிய தர்மசாஸ்தாவின் திருக்கோயில் உதயணன் என்ற கொடியவனால் சீரழிக்கப் பட்டது அல்லவா? எனவே மீண்டும் அவ்விடத்தே அக்கோயிலை ஐயப்பன் தன் பந்தள வளர்ப்புத் தந்தை இராஜசேகர பாண்டியன் மூலம் உருவாக்கினார்.
______________________________________________________________________________________________________________________________________
௫.சபரி பீடத்தில் அக்கோயிலை உருவாக்கக் காரணம் என்ன?
பாரத நாட்டின் மிகப் பெரிய பலம் குடும்ப வாழ்க்கை ஆகும். குடும்ப தர்மத்தைக் கடைப்பிடித்துக் காட்டியவர் ஸ்ரீராமன்.அவர் தன் வாழ்க்கையையே பணயம் வைத்துத் தன் இல்லறத் துணையாகிய அன்னை சீதையைத் தேடித் திரிந்து கிஶ்கிந்தையில் சுக்ரீவன் மற்றும் அனுமானின் உதவியால் இலங்கையில் இருந்து மீட்டார்.
மிக உயர்ந்த இல்லற தர்மத்தை அவர் கடைப்பிடித்தார்.அவர் அந்த தர்மத்தைக் கடைப்பிடிக்க நடந்த மாற்றங்கள் சபரிபீடத்தில் தானே நிகழ்கிறது?
சபரி அன்னை தானே சுக்ரீவனை அறிமுகம் செய்தார்? அதுதானே ராமாயணத்தின் ”டர்னிங் பாய்ண்ட்”?
ராமாயணத்தின் தர்மமே பாரத தர்மம். இதை வலியுறுத்தவே ஐயப்பன் அவ்விடத்தைக் கண்டு அடையாளம் சொன்னார்.காரணம் ஐயப்பன் அவதரித்து வாழ்ந்த காலத்தில் குடும்ப தர்மம் என்பதெல்லாம் பல காரணங்களால் நலிய ஆரம்பித்து இருந்தது.
அந்த உயர்ந்த தர்மதிற்கே தலைவனாய் சாட்சியாய் தர்மசாஸ்தா உள்ளார்.அந்த உன்னத தர்மத்தை நிலை நாட்டவே அவர் திருஅவதாரம் புரிந்தார்.
நவீன உலகில் பொருளிச்சையால் சீரழியும் குலதர்மத்தை மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்தவே அவர் ”கலியுக ஈஶ்வரனாய்” அதிக பக்தர்களை ஈர்த்துக் கொண்டு இருக்கிறார்.
” எப்போது எல்லாம் தர்மம் தளர்கிறதோ அதை சீர் செய்ய நான் அவதரிப்பேன்” என்று இறைவன் பகவத் கீதையில் கூறினார்.இன்று பாரத தேசத்தின் தர்மத்தை நிலைநிறுத்திடவே ஐயப்பனாக இறைவனின் அவதரமும் அமைந்துள்ளது.
______________________________________________________________________________________________________________________________________
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment