Friday, March 12, 2010

QUESTIONS ABOUT AYYAPPAN - 1

ஸ்ரீசக்தி பெளண்டேஶன், கோவை

தர்ம சாஸ்தா வழிபாடுக் கருத்துக்கள், வரலாற்றுக் குறிப்புகள் _ பகுதி ஒன்று

அறிமுகம்: வணக்கம்! தர்மத்தினைக் காக்க இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் திருஅவதாரம் புரிகிறார்.அவ்வழியில் கலியுக ஈஶ்வரனாய் இன்று சபரிமலை ஐயப்பன் அவதாரம் செய்து நம்மைக் காத்தருள்கிறார்.ஆண்டு தோறும் அன்பர்களின் கூட்டம் அதிகரிக்கிறது.இந்நிலையில் மிகப் பழைய நூல்களும் எழுபதுகளில் வந்த அற்புத புத்தகக் குறிப்புகளும் மிக முக்கியமான பல புராண, இதிகாச, வரலாற்றுக் கருத்துகளை அன்றைய சமுதாயத்திற்கு வழங்கின.அவை இன்று இக்கால இளையசமூகத்திற்கும் தெரிய வேண்டும். ஐயப்பனை ஏன் அவதரா புருஶணாக பாரதம் போற்றுகிறது என்ற கேள்விகளுக்கு எளிய முறையில் அக்கால நூல்களின் உறுதுணையுடனும் சுவாமியின் அருளுடனும் குருவின் ஆசியுடனும் இந்த வரலாற்றுப் பகுதியும் வினா-விடைப் பகுதியும் வெளியிடப்படுகின்றன.எக்குறை இருப்பினும் அன்பர்கள் தயை கூர்ந்து ஏற்று அருளவும்.குறிப்பாக குழந்தைகளும் மாணவர்களும் கல்லூரி இளைஞர்களும் இதைப் படித்தறியப் பெரியவர்கள் உதவுமாறு வேண்டுகிறோம்!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

௧. ஐயப்பனை ஏன் ”தர்ம சாஸ்தா” என்கிறோம்?

இந்த ப்ரபஞ்சத்தில் தோன்றிய அனைத்து பொருள்களும் உயிர்களும் ஒரு தர்மத்தினைக் கடைப்பிடித்தே வாழ்கின்றன. குறிப்பாக மனிதர்களின் வாழ்க்கை தர்மத்தின் அடிப்படையிலே இயங்குகிறது.இந்த தர்மத்தை ஒரு போதும் நாம் கைவிடக் கூடாது.இந்த தர்மத்தின் சாட்சியே தர்ம சாஸ்தா.

௨. அந்த ”தர்மம்” என்றால் என்ன?

உலகில் வாழும் நாம் எப்போதும் சத்தியப் பாதையில் அனைவருக்கும் அனைத்து உயிர்களுக்கும் பொருள்களுக்கும் தீங்கு செய்யாமல் சுயநலம் இல்லாமல் வாழ்வதே தர்மம்.இன்னும் சொன்னால், நமக்கு எது தீமை என்று எண்ணுகிறோமோ அதை மற்றவர்களுக்கும் செய்யாமல் வாழ்வதே தர்மம் ஆகும்.

௩.தர்ம சாஸ்தாவை ஏன் ”ஹரிஹர புத்ரன்” என்கிறோம்?

விஶ்ணுவாகிய ஹரி நம்முள் விளங்கும் விழிப்புணர்வு ஆகும்.சிவமாகிய ஹரன் நமது ” மெய்யுணர்வு”.இவ்விரண்டு சக்திகளும் இணைந்த சக்தியின் தத்துவமே தர்ம சாஸ்தா ஆகும்.எனவே இவர் ”ஹரிஹர புத்ரன்” எனப்படுகிறார். மேலும் ஐயப்பனின் கருணை என்பது பராசக்தியின் தத்துவமும் அவருடன் இணைந்ததால் வந்ததே! எனவே அவர் விஶ்ணு-சிவன் மற்ரும் அன்னை பராசக்தியின் அம்சம் ஆவார்.

௪. தர்மசாஸ்தாவை யார் முதன்முதலில் தென்னகத்தில் ப்ரதிஶ்ட்டை செய்தது?

பரசுராமர் தான் சாஸ்தாவை முதன்முதலில் தென்னகத்தில் ப்ரதிஶ்ட்டை செய்தார்.ஆனால் அவருக்கு முன்பே பாரத சமுதாயம் தர்மத்தினைக் கைடைபிடித்து அதன் மூலம் சாஸ்தா தத்துவதை அறிந்திருந்தது. பரசுராமர் தன் தென்னக யாத்ரையின் போது இன்றைய கேரளத்தில் உள்ள மக்களை ஆன்மீகப் பாதையில் வழிநடத்த வேண்டி சிவனுக்கும் சக்திக்கும் விஶ்ணுவிற்கும் தர்மசாஸ்தாவுக்கும் சேர்த்து நூற்றி எட்டுக் கோயில்களை அமைத்தார்.அவர் அமைத்த பல சாஸ்தா கோயில்கள் இன்று மறைந்து இருக்கின்றன.

௫. தர்மசாஸ்தாவின் முக்கிய கோயில்கள் என்று எவை போற்றப்படுகின்றன?

பந்தளம், ஆரியங்காவு, அச்சன் கோயில், குளத்துபுழை, எருமேலி மற்றும் சபரிமலை.முருகன் எப்படி அறுபடை வீடுகளில் ஒவ்வொரு உருவத்திலும் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தி வாழ்கிறாரோ அதே போல் தர்மசாஸ்தாவும் இவ்விடங்களில் வெவ்வேறு உருவங்களிலும் தத்துவங்களிலும் வாழ்கிறார்.

௬. தர்மசாஸ்தாவிற்கு ”ஐயப்பன்” என்ற பெயர் எப்படி வந்தது? அவருக்கு வேறு பெயர்கள் உண்டா?

மணிகண்டன் ஆகிய பந்தள இளவரசன் இன்றைய சபரிமலையில் உள்ளக் கோயிலை மீண்டும் புதுப்பித்தான். அதில் தர்மசாஸ்தாவின் சிலையை ப்ரதிஶ்ட்டை செய்து யாவரும் காண தன்னையே கற்பூரம் போல் கர்ப்பகிரஹத்தில் கரைத்துக் கொண்டான்.அப்போது அவன் பிரிவைத் தாளாத பந்தள அரசன் இராஜசேகர பாண்டியன்,” ஐயனே என் ஐயப்பா மறைந்தாயோ!?” என்று கதறினான்.அன்று முதல் அவ்விடத்தில் தர்ம சாஸ்தாவுக்கு ஐயப்பன் என்ற பெயர் ஏற்பட்டது.

மேலும் அவருக்கு அவர் பெற்றோர் வைத்த பெயர் ”பூதநாதன்” அதாவது நிலம்-காற்று- தீ-ஆகாயம் மற்றும் தண்ணீருக்கும் அவரே தெய்வம் என்று பொருள்.தர்ம சாஸ்தா சகஸ்ரநாமங்கள் ஆயிரமும் இவருக்கு உண்டு.

இவர் அவதாரம் செய்து மக்களுடன் வாழ்ந்த காலத்தில் பழங்குடி மக்களும் ஆதிவாசிகளும் இவரை ”வேட்டை சாஸ்தா” என்று அழைத்தனராம்.அதாவது மனதில் உள்ள தீய எண்ணங்கள் என்னும் கொடிய விலங்குகளை இவர் வேட்டையாடி மனதைக் காப்பதால் இப்பெயர் வந்தது.

௭. ஐயப்பன் என்பவர் யார்?

தர்மசாஸ்தாவின் அவதாரம் தான் ஐயப்பன்.இவர் சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் அவதாரம் செய்தார்.இவரது பெற்றோர் இன்றைய சபரிமலையில் இருக்கும் சாஸ்தாவிற்கு வழிவழியாகப் பூஜை செய்யும் பரம்பரையினர்.இவரது தந்தை ”ஜெயந்தன்”.தாய் பந்தள இளவரசி ஆவார்.இவரைப் பின்னாளில் பந்தள ராஜன் இராஜசேகர பாண்டியன் தத்து எடுத்து வளர்த்தார்.

௮. ஐயப்பன் கல்யாணம் ஆனவரா?

தர்ம சாஸ்தாவுக்கு இரு மனைவியர் அவரது சக்திகளாய்ப் போற்றப்படுகின்றனர்.அவர்கள் ”பூர்ணா தேவி” மற்றும் ” புஶ்கலை தேவி” ஆவர்.ஆனால் ஐயப்பன் பதினாறு வயது பிரம்மச்சரிய நிலையிலேயே தன் அவதாரத்தைப் பூர்த்தி செய்தார்.

௯. அப்படி என்றால் ”மாளிகைப்புர மஞ்சள் மாதா” யார்?

இவர் ஒரு இளவரசி ஆவார்.மிகவும் தன் அழகிலும் படிப்பிலும் செல்வத்திலும் கர்வம் கொண்டிருந்தார்.இந்த ஆண்வத் தன்மையே ”மகிஶி” என்ற எருமை குணம் ஆகும். ஆணவம் கொண்ட இவரது பெண்மையை அடக்கி நல்வழியில் மணிகண்டன் இவரை வழிநடத்தினார்.இவரும் தன்னை அன்பினாலும் தூய சேவையாலும் மணிகண்டனுக்கே அடிமைப் படுத்தினார்.ஆனால் ப்ரம்மச்சரிய வயதில் இவர்கள் கல்யாணம் நிகழவில்லை.மாளிகைப்புரம் என்பது இவரது ஊர் ஆகும்.இது எருமேலிக்கு அருகில் இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.உலகார் முன் தாலி கட்டிக் கல்யாணம் ஆகாவிடினும் தன் மனதில் இவருக்கு தன் சக்தி என்ற அந்தஸ்தை ஐயப்பன் தந்துள்ளார்.இதுவல்லவா உண்மையான கல்யாணம்?

௧0. இவருக்கு எப்படிக் கோயில் வந்தது?

தன்னை சிவமாக உணர்ந்த மணிகண்டன் தன்னையே நம்பி வந்த மஞ்சம்மாவைத் தான் சக்தியாக மதித்தார்.அவரை மதுரை மீனாட்சியின் அம்சம் என்று மதித்து வாழ்ந்தார்.இவரது ஒப்பில்லா அன்பையும் கருணையையும் சேவையையும் போற்றிடவே இவருக்குக் கோயில் உண்டானது.

௧௧. வாவர் என்பவர் யார்?

இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவர் என்ற வரலாற்றுக் குறிப்பும் உண்டு.ஆதியில் தமிழ் ஐயர்களாய் இருந்த இவரது குலம் முஸ்லிம் மதத்தைத் தழுவும் நிலை ஏற்பட்டது.இவரது முன்னோர்கள் கோட்டயம் மாவட்டம் செங்கனாச்சேரிக்கருகில் உள்ள கஞ்சிரப்பள்ளியில் வந்து வாழத் தொடங்கினர்.

இவர்கள் கடல் வியாபரம் செய்தனர். யுனானி மருத்துவமும் பயின்று மக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.இவர்களின் குடும்பத்தில் தோன்றிய வாவர் தன் வாழ்க்கை வழிகெட்டு கொள்ளைக்காரர் ஆனார்.கடல் வழியும் கொள்ளைகள் பல செய்தார்.பின்னர் ஐயப்பனை எதிர் கொண்டு எதிர்த்தார்.அவர் ஐயப்பனை விட மிகவும் வயதில் மூத்தவர்.ஐயப்பனும் அவரும் சரிக்குசரி போராடிய போது ஐயப்பனுள் இருக்கும் அலாதி பலத்தையும் சக்தியையும் அறிந்துணர்ந்த இவர் ஐயப்பனையே தன் ஆன்மீக குருவாய் ஏற்று மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார்.கொடுமைக்காரன் உதயணனை அவரே போரில் கொன்றார்.

இவரும் ஐயப்பன் தன் பூத உடலை மறைத்தவுடன் சிறிது காலத்தில் இறைவனடி சேர்ந்தார்.இவரது அன்பைப் போற்றிப் பந்தள மக்கள் இவருக்குப் பதினெட்டாம்படி அருகில் சந்நிதி ஏற்படுத்தினர்.

இன்று இவரது சந்ததியினர், ஆழப்புழை மாவட்டம் திருவல்லா நகருக்கு அருகில் உள்ள வைப்பூர் கிராமத்தில் வாழ்கின்றனர்.

இவர் முதன்முதலின் ஐயப்பன் காட்டுக்குள் யானை மீது வருவதைப் பார்த்து பரவசம் கொண்டாராம்.மேலும் இவர் ஐயப்பனின் அனுமதியுடன் எருமேலியில் மசூதியும் கட்டினார்.அதன் மூலம் இந்து -முஸ்லிம் மதநல்லிணக்கம் உண்டானது.மதங்கள் இணைந்தி அன்று செயல்பட்டதால் தான் ஐயப்பனால் மிகக் கொடிய உதயணனைக் கொல்ல முடிந்தது.

இவர் போரில் பயன்படுத்திய கத்தி இன்னும் இவரது முசால கன்னகர் வீட்டில் பாதுகாக்கப்பட்டும் வருகிறது.ஆண்டு தோறும் மண்டல பூஜைக்கு இது எடுத்துவரப் படுகிறது.

கோயிலின் வருமானத்தில் ஒரு பகுதியை இவரது சந்ததியினர் பயன்படுத்துகின்றனர்.

௧௨. வாவரின் சந்நிதி எப்படி இருக்கும்?

முஸ்லிம் மத நியதிக்குஏற்ப அவரது கோயிலில் சிலைகள் ஏதும் இல்லை.வெறும் சுவற்றில் தான் பச்சைத் துணி சார்த்தப்பட்டு அதன் முன் அவரது கத்தியும் வைக்கப் பட்டு வழிபாடு நடக்கிறது.இவருக்கு முக்கிய காணிக்கை மிளகு ஆகும்.தன் கொள்ளைத் தொழிலை ஐயப்பன் முலம் கைவிட்ட வாவர் பின்னர் தன் குடும்பத்தைப் பேணவும் தன் கூட்டத்தருக்குப் பொருள் ஈட்டவும் மிளகு வியாபாரம் செய்ய முற்பட்டிருக்க வேண்டும்.

மேலும் மிளகுக் கொடி மரங்களைச் சுற்றிப் படர்ந்து உயரத்தில் ஏறி வளரும்.அது போல் நாமும் இறைவனையே பற்றுக் கோடாகக் கோண்டு வாழ வேண்டும் என்பதை மிளகு குறிக்கிறதாகக் கொள்ளலாம்.மேலும் மிளகு மிகச்சிறந்த அருமருந்தாகப் பயன்படுவதைப் போல் இறைவனே நம் வினை தீர்க்கும் மாமருந்து என்றும் கொள்ளலாம்.

௧௩. ஐயப்பனுடன் அவரது வாழ்க்கையில் தொடர்புபட்டவர்கள் யார் யார் என்ற வரலாற்றுக் குறிப்புகள் உண்டா?

* கொச்சுகடுத்த சுவாமி- இவர் பந்தள தேசத்தின் படைத் தளபதிகளில் ஒருவர்.ஐயப்பனின் பரப்ரம்ம நிலையையும் வீரத்தினையும் உணர்ந்து தன்னையே அடிமையாக்கிக் கொண்டார்.உதயணனுடன் நடந்த போரில் கலந்தும் கொண்டார்.பின்னாட்களில் ஐயப்பனின் சேவையை மறையும் வரை எளிய மக்களுக்குச் செய்தார்.இவருக்கும் சந்நிதி உண்டு.

* க்ருஶ்ணன் மற்றும் ராமன் என்ற இரண்டு சகோதரர்கள் ஐயப்பனுக்குப் போரில் துணை புரிந்தனர்.இவர்கள் கைக்குத்துச் சண்டையில் கைதேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஐயப்பன் ”தலப்பரா வில்லன், தலப்பரா மல்லன்” என்ற பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தார்.


* பூஞ்சார் மாணிக்கவர்மன்: இவரும் பந்தள தேசத்தின் ஒரு முக்கிய தளபதி ஆவார்.ஐயப்பனின் பெருமைகள் பரவிக் கொண்டு இருந்த காலத்தில், இவர் வண்டிப்பெரியார் காட்டுப்பாதையில் பயணம் செய்த ஒரு வேளையில் உதயணனின் கூட்டத்தினர் இவரைத் தாக்க வந்தனர். தன் குல தெய்வமான மதுரை ஸ்ரீமீனாட்சியை இவர் மூலமந்திரங்களால் போற்றி அழைத்த உடனே, ஐயப்பன் பெரிய யானையின் மீது அவ்விடத்தே வந்து கொள்ளையர்களிடம் இருந்து இவரைக் காப்பாற்றியுள்ளார்.இவர் மூலமே பந்தள நாட்டுக்குள் ஐயப்பனின் பெருமை அதிகம் பரவியுள்ளது.


* சேர்த்தலை சேரமூப்பன்: இவர் ஒரு சிறந்த மல்யுத்த வீரர், பயிற்சியாளர். உதயணனை எதிர்க்க ஐயப்பன் நாடு முழுதும் பயணம் செய்து படை திரட்டும் தருணத்தில் இவரையும் சந்தித்து இவரது பல கைதேர்ந்த மாணவவீரர்களையும் படையில் சேர்த்தாராம். இவரது மகளும் ஐயப்பனிடம் தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.அன்பை ஏற்ற ஐயப்பன் அவரது வலக்கையில் இருந்த ராஜவம்சத்து வீரகங்கணத்தை இவருக்கு தன் அடையாளமாக அளித்தார். மேலும் மக்களின் சேவையே ப்ரதானம், இல்லறம் பின்னரே என்று அறிவுரை கூறிச் சென்றுவிட்டார்.இவரே புஶ்கலா தேவியின் மறுஅவதாரம் என்று நம்பிக்கை.

* மிலாது: ஐயப்ப பக்தர்கள் வாவருக்கு இணையாக மதிக்க வேண்டியவர் மிலாது.இவர் பரம ஏழை.ஐயப்பனுடன் பள்ளியில் பயின்றவர்.குருதட்சிணைக்கு ஏதும் தர இல்லாமல் அழுதார். அப்போது ஐயப்பன் ஒரு சிறிய கிண்ணியில் நெய் தந்து அதை குருவிடம் தரச் சொன்னார்.அப்படியே மிலாதும் செய்ய, குருபத்தினி பால்பாயாசத்திற்கு அந்த நெய்யை ஊற்ற அது தீராமல் வழிந்தபடியே இருந்தது.சதா தான் ஐயப்பனையே எண்ணி வாழ வேண்டும் என்ற அன்பை இவர் பெற்றார்.ஐயப்பனை நாடும் அன்பர்களை இவர் எப்படியாவது அவரிடம் கூட்டிச் செல்வாராம்.இன்றும் இவரது ஆத்மா மலைக்காடுகளில் தன் பெயரைச் சொல்லும் அன்பர்களுக்கு ஐயப்ப தரிசனம் தர காத்துக் கொண்டிருக்கிறது.

௧௪. ஐயப்பன் அவதராம் செய்த காலம் , நட்சத்திரம் எதுவோ?

சுமார் இன்றைக்கு முன் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் இவரது திருஅவதாரம் நிகழ்ந்துள்ளது. இவர் பங்குனி உத்திரத்தில் தோன்றினார்.இவரது ஜாதகத்தினைப் பழந்தமிழ்ப் பாடல் ஒன்றும் குறிக்கிறது.

௧௫.மகரவிளக்கு என்பது என்ன?

உதயணனால் தரைமட்டம் ஆக்கப் பட்ட சபரிமலை தர்மசாஸ்தா கோயிலை ஐயப்பன் மீண்டும் உருவாக்கி அதில் மகர சங்கராந்தி அன்று புதிய விக்ரஹத்தினை ப்ரதிஶ்ட்டை செய்தார்.அன்றே தன் அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்து ஜோதிமயமானார்.அந்த நாளே மகர விளக்கு உற்சவநாள் ஆகும்.

௧௬. ஐயப்பன் வாழ்க்கையின் பெரிய பங்கு வகிக்கும் உதயணன் யார்?

ஐயப்பன் அவதாரம் செய்த காலத்தில் பாரத மண்ணில் பற்பல சாம்ராஜ்யங்கள் இருந்தன. ஒரு புறம் முகலாயர்களின் ஆட்சி, இஸ்லாமியர்களின் வருகை, மதமாற்றம் என சமுதாயம் மாற்றங்களைக் கண்டது.பல மன்னர்கள் பேருக்கு ராசாக்களாகவும் போர் என்றாலே ஓடி ஒளிபவர்களாகவும் இருந்த வேலையது.

இச்சூழலில் உதயணன் என்பவன் தொட்டில் குழந்தையும் பயக்கும் படியான கொடியவனாக இன்றைய மதுரை, தேனி,கம்பம், செங்கோட்டை, திருநெல்வேலி, கேரளாவின் மலையோரப் பகுதிகள் ஆகியவற்றில் தன் கொடூரக் கொள்ளையை நடத்தினான்.

கொள்ளை,கற்பழிப்பு,வன்முறை,சூறையாடல், சித்ரவதை, அடிமைப்படுத்துதல், கடல் கொள்ளை, காட்டை அழித்தல், வழிபறி, கோயில் கொள்ளை எனப் பட்டியலிட முடியாத பஞ்சமா பாதகங்களையும் செய்தான்.

இவனைக் கம்சன், ராவணன், மகிஶாசுரன் போன்ற அரக்கர்கள் வரிசையில் பழைய பாடல்கள் ஒப்பிடுகின்றன.மன்னர்கள் கூட இவனை எதிர்க்க பயந்தனர்.

இவன் மன்னர்களை விடப் பெரிய கொள்ளைப்படையை வைத்திருந்தார்.இஞ்சிப்பாறைக் கோட்டையும் எருமேலிக் கேட்டையும் இவனது கைவசமாய் இருந்துள்ளது.

ஐயப்பன் தனி ஒரு ஆளாய் மக்களை ஒன்று திரட்டித் தன் முயற்சியால் இவனை அழித்தார், நாட்டில் அமைதியையும் நல்வாழ்க்கையையும் மக்களுக்கு ஏற்படுத்தினார்.நலிந்து போன பாரத பண்பாட்டை மீண்டும் தூக்கிநிறுத்தினார்.

முதல் பகுதி நிறைவு பெற்றது!

* மக்களும் ஐயப்ப அன்பர்களும் என்ன சந்தேகம் வேண்டுமானாலும் கேட்கலாம், தகவல்களைக் கூறலாம், சேர்க்கலாம்.

1 comment:

  1. அப்போ உதயன் என்ற கோள்ளையனை அழிக்கதான் தர்ம சாஸ்தா ஐயப்பனா அவதாரம் எடுத்தாரா.?
    மகிஷியினு- சொல்ரது சும்மா தானே.?
    ஆமா அப்படித்தான் இருக்கும்.
    ஆனா வரம்(ஹரியும் ஹரனும் சேர்ந்து பிரக்கும் குழந்தை) கேட்டது அதெல்லாம் என்ன.?

    ReplyDelete